சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிராமணர்களுக்குப் பாதுகாப்பு கோரியும், இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனி சட்டத்தைக் கொண்டுவரக் கோரியும், கடந்த 3ஆம் தேதி சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்றுப் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து குறிப்பிட்ட கருத்து சர்ச்சையானது. கஸ்தூரியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. அதேபோல், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் நடிகை கஸ்தூரிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்.
அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கஸ்தூரி இட்ட பதிவில், தனது பேச்சை சிலர் திரித்துக் கூறிவிட்டதாகவும், திராவிட அரசியலின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தும் வகையிலேயே தான் பேசியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தெலுங்கர்கள் பற்றிய அவதூறு கருத்தை நடிகை கஸ்தூரி திரும்பப் பெற வேண்டும் என்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தினார்.
தெலுங்கு மக்களின் மனதைப் புண்படுத்திய நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக விளையாட்டுப் பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார். கஸ்தூரியின் கருத்து எல்லைமீறி போய்விட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தனது கருத்துகளையும் திரும்பப் பெற்றுள்ளார்.

