சட்டவிரோதமாக மருந்துகளை விற்ற 76 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து

1 mins read
f188026d-4cad-4021-aec8-f40297db3964
மருத்துவர்களின் பரிந்துரையின்றி சில மருந்தகங்கள், குறிப்பிட்ட சில மருந்துகளை விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்தன. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

சென்னை: மருத்துவர்களின் பரிந்துரையின்றி, சட்டவிரோதமாக மருந்துகளை விற்ற 76 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் இவற்றின் செயல்பாடுகளைக் கவனித்து வருகிறது.

இந்நிலையில், மருத்துவர்களின் பரிந்துரையின்றி சில மருந்தகங்கள், குறிப்பிட்ட சில மருந்துகளை விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, சில மருந்தகங்கள் மனநல, வலிநிவாரண மாத்திரைகள், கருத்தடை, கருக்கலைப்பு மாத்திரைகள், தூக்க மாத்திரைகளை மருத்துவர்கள் வழங்கும் மருந்துச்சீட்டுகள் இல்லாமல் விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.

“இது சட்டப்படி தவறு. இது தொடர்பாக 59 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், 17 மருந்தகங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

“மேலும், விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரக அதிகாரி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மாநிலம் முழுவதும் அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்