தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்ஜெட் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிமுக, பாஜக

2 mins read
90f85856-a6d2-43d3-982f-520b12b2dd9e
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ஏறக்குறைய 40,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எனினும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார்.

2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14) காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அவர் உரையை வாசிக்கத் தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள், சபாநாயகர் அப்பாவு பதவிநீக்கம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தனர்.

மேலும், டாஸ்மாக் நிறுவன முறைகேடுகளுக்கு ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதை அடுத்து, இந்த முறைகேட்டிற்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். எனினும் கோரிக்கை ஏற்கப்படாததால் அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ஏறக்குறைய 40,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்தார்.

“இம்முறைகேடு தொடர்பாக திமுக அரசு இதுவரை எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை.

“அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அந்தச் சோதனை மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக அறிவித்த பிறகும், இந்த அரசு எந்தச் செய்தியும் வெளியிடவில்லை,,” என்றார் பழனிசாமி.

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், “டாஸ்மாக்கில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்ய திமுகவிற்கு தகுதி இல்லை. பிரச்சினையை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்,” என்றார்.

பாஜக எம்எம்ஏ நயினார் நாகேந்திரன் கூறுகையில், “டாஸ்மாக் முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி தராததால் வெளிநடப்பு செய்தோம். திமுக அரசு தனது ஊழல்களை மறைக்க முயற்சி செய்கிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்