தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக, பாஜக கூட்டணி: பதவி விலகும் அண்ணாமலை

2 mins read
99d7e387-dafc-4d06-8c4e-b4785b6e9207
அண்ணாமலை. - படம்: ஊடகம்

கோவை: எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தாம் விலகப்போவது உறுதி என அண்ணாமலை அறிவித்துள்ளார்.

டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசிய அண்ணாமலை கோவை திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாஜக தலைமை முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

“கூட்டணி குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதுதான் இறுதியான முடிவாகும். கூட்டணி குறித்து எனது தனிப்பட்ட கருத்து ஏதும் இல்லை. பாஜகவின் வளர்ச்சிதான் முக்கியம்,” என்றார் அண்ணாமலை.

“அதிமுகவுடன் பாஜக இனிஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். அந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. நான் மாற்றிப் மாற்றிப் பேசுகிற அரசியல்வாதி அல்ல,” என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

தமிழகத்தில் இன்னொரு கட்சியை அழித்துதான் பாஜக வளர வேண்டும் எனும் அவசியமில்லை என்று குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி ஏப்ரல் 6ஆம் தேதி ராமேசுவரம் வருவதாகத் தெரிவித்தார்.

“அரசியலில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு இடமில்லை. எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க அனைத்து உரிமையும் உண்டு. அதேபோல், அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்திருப்பதில் தவறு இல்லை.

“செங்கோட்டையன் பயணம் குறித்து யூகங்கள் எழுதப்படுகின்றன. திரைமறைவில் யாரையும் சந்தித்துப் பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது,” என்றார் அண்ணாமலை.

இதையடுத்து அண்ணாமலையை மத்திய அமைச்சராக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதையடுத்து அதிமுக, பாஜக கூட்டணி உறுதியானதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்