சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தின்போது அதிமுகவினர் வெளியேறிய நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த செங்கோட்டையனுக்கு பேச அனுமதிக்கப்பட்டது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திங்கட்கிழமை (ஏப்ரல் 7) அன்று ‘அந்த தியாகி யார்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பேட்ஜ்ஜுடன் வந்த அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் போல செங்கோட்டையன் பேட்ஜ் அணியாததால் அவரை அவைக் காவலர்கள் வெளியேற்றவில்லை.
இந்த நிலையில் செங்கோட்டையன் பேச அவைத் தலைவர் அப்பாவு அனுமதி வழங்கினார்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தில் செங்கோட்டையன் பங்கேற்று கேள்விகளை எழுப்பினார்.
கோபியில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கத்தில் செங்கோட்டையன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
“சாயப்பட்டறைகளிலிருந்து ஆறுகளில் கழிவுநீர் வெளியேறுவது தொடர்பாக அவை உறுப்பினர்கள் பேசினார்கள். எனவே, சாயக் கழிவுநீர் ஆறுகளில் கலப்பதை முழுமையாகத் தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, உரிய தொழில்நுட்பக் குழுக்களை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி அவர்களின் பரிந்துரையின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் பதிலளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தும் பதாகைகளைக் காட்டியதால் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
திங்கட்கிழமை முழுவதும் அவை நடவடிக்கையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
அதிமுகவினர் அணிந்திருந்த பேட்ஜ்ஜில், டாஸ்மாக் என்ற வார்த்தையும் இடம்பெற்றிருந்தது.
கையில் பதாகைகளுடன் வெளியேறிய அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்ற வளாகத்தில் முழக்கங்களை எழுப்பினர். பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் நிலை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.


