பழைய நாணயங்களை மாற்ற தரகராகச் செயல்பட்ட அதிமுக நிர்வாகி கைது

பழைய நாணயங்களை மாற்ற தரகராகச் செயல்பட்ட அதிமுக நிர்வாகி கைது

படம்: தினகரன் / இணையம்

23 Mar 2025 - 4:54 pm

2 mins read

ஒட்டன்சத்திரம்: நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நாணயங்கள் இனி செல்லாது என்று 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பழைய 500, 1000 ரூபாய் நாணயங்களை மாற்ற முயன்ற ஒருவரை புதுச்சேரிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது அவர், தான் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான 40 வயது நல்லமுத்து என்ற கண்ணன் மூலம் அந்த ரூபாய் நாணயங்களைப் பெற்றுப் புதுச்சேரியில் மாற்றியதாகத் தெரிவித்தார்.

மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நல்லமுத்து தரகராகச் செயல்பட்டு ரூ.500, 1000 நாணயங்களைப் புதுச்சேரியில் மாற்றிக் கொடுத்தார். இவருக்கு சேலம் மாவட்டம் சுந்தரம்வரதன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. மேலும், புதுச்சேரியில் புதிய ரூபாய் நாணயத்துக்குப் பழைய நாணயம் தருவதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட மோசடி சம்பந்தப்பட்ட வழக்கில் இவருக்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த ராமானுஜம், 48, பழைய ரூபாய் நாணயங்களைப் புதிய நாணயங்களாக மாற்ற 20 விழுக்காடு கமிஷன் தொகை பெற்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியையடுத்து புதுப்பட்டிக்கு வந்த புதுச்சேரிக் காவல்துறையினர் ரெட்டியார்சத்திரம் காவல்துறை உதவியுடன் நல்லமுத்து என்ற கண்ணன் குறித்து விசாரித்தனர். அப்போது நல்லமுத்து, ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கி இருப்பது காவல்துறைக்குத் தெரிந்தது.

அதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற புதுச்சேரிக் காவல்துறையினர் நல்லமுத்துவைக் கைது செய்து விசாரணைக்காக புதுச்சேரி அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நல்லமுத்து என்ற கண்ணன், அதிமுக கட்சியின் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் என்று மாலை மலர் உள்ளிட்ட தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்