முதல்வர் பதவி விலகக் கோரி பதாகை காட்டிய அதிமுக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

1 mins read
2f535475-18e0-46f5-9ac9-1567a7685514
‘யார் அந்த தியாகி’ என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட கறுப்பு வில்லைகளை அதிமுக எம்எல்ஏக்கள் அணிந்திருந்தனர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தும் பதாகைகளை சட்டப்பேரவையில் உயர்த்திக்காட்டிய அதிமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (ஏப்ரல் 7) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, டாஸ்மாக் நிறுவன ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்தார்.

டாஸ்மாக் வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அதுகுறித்து விவாதிக்க இயலாது என அப்பாவு விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தும் பதாகைகளைக் காட்டியதால் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

திங்கட்கிழமை முழுவதும் அவை நடவடிக்கையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

முன்னதாக, டாஸ்மாக் ஊழலை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையில், ‘யார் அந்த தியாகி’ என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட கறுப்பு வில்லைகளை அதிமுக எம்எல்ஏக்கள் அணிந்திருந்தனர்.

அந்த வரிக்குக் கீழே, டாஸ்மாக் என்ற வார்த்தையும் இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்