தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அண்ணாமலைக்கு எதிராக அதிமுக காவல்துறையில் புகார்

2 mins read
264a5576-96b5-43b1-ba3f-f097d7358089
அதிமுக மருத்துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் சரவணன். எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை அவதூறாகப் பேசியதாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். - கோப்புப் படம்: ஊடகம்
multi-img1 of 2

மதுரை: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திங்கட்கிழமை அதிமுக மருத்துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் களங்கப்படுத்தும் நோக்கில் பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும் பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். எனவே, அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் டாக்டர் சரவணன் கூறியுள்ளார்.

சென்னையில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் பாஜக பொதுக்கூட்டம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.

அப்போது அண்ணாமலை, “பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சிலுவம்பாளையத்தில் நடந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் பின்னர் திமுக அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி.

அதன்பிறகு தவழ்ந்து வந்துதான் முதல்வர் ஆகியிருக்கிறார். எனவே பழனிசாமி என்னைப் பற்றி விமர்சிக்கத் தகுதி இல்லை. கூட்டணிக் கட்சித் தலைவராககூட பழனிசாமியை நான் ஏற்றது இல்லை. பழனிசாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். திராவிடக் கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும்,” எனப் பேசியிருந்தார்.

அண்ணாமலையின் இந்தப் பேச்சை அதிமுகவினர் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், அக்கட்சியின் மருத்துவ அணி மாநிலச் செயலாளர் டாக்டர் சரவணன், காவல்துறையில் அண்ணாமலை மீது புகார் கொடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்