சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களின் உட்புறங்களில் வைக்கப்பட்டுள்ள சில விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் நாகரிகச் சமூகத்திற்கு எதிரானதாகவும் அமைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மக்களுக்குத் தரமான பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்கி வருவதைப் பாராட்டியுள்ளார்.
அதேநேரம், மெட்ரோ ரயிலுக்குள் இடம்பெற்றுள்ள தனியார் நிதி நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில், ‘பெண் நண்பர் பூஜ்ஜியம் விழுக்காடு வட்டி தரலாம்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய வாசகங்கள் பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையும் சீர்குலைப்பதாகவும் சமூகத்தில் வேரூன்றியுள்ள ஆணாதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். பெண்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் அவர்களை ஒரு நுகர்பொருளாக மட்டுமே சித்திரிக்கும் இத்தகைய விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனமான மெட்ரோ ரயில் நிர்வாகம் இவ்வாறான விளம்பரங்களுக்கு எவ்வாறு அனுமதியளித்தது என்று கேள்வி எழுப்பிய அவர், சர்ச்சைக்குரிய அந்த விளம்பரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


