நீலகிரி: எலும்புச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 11ஆம் வகுப்பு மாணவி, ஆண்டு இறுதித் தேர்வை எழுத ஆம்புலன்ஸ் வாகனத்தில் தேர்வு மையத்துக்கு வந்தது காண்போரை நெகிழச் செய்தது.
நீலகிரி மாவட்டம் பாட்டவயல் பகுதியைச் சேர்ந்தவர் சைனுதின். இவரது இரு பெண் குழந்தைகளுமே எலும்புச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இருவருமே எழுந்து நடமாட முடியாத நிலையில், படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பெற்றோர்தான் கவனிக்கின்றனர்.
இதையும் மீறி கல்வியில் ஆர்வம் காட்டி வரும் 17 வயதான ஜாஸ்மின், தற்போது 11ஆம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இதற்காக, ஆம்புலன்ஸ் மூலம் தேர்வுக்கூடத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
மாணவியின் தன்னம்பிக்கையைக் கண்டு வியந்த பொதுமக்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்வுக்கூடத்துக்கு வந்த ஜாஸ்மினை அங்கிருந்த ஆசிரியர்களும் அவரது குடும்பத்தாரும் இணைந்து தேர்வு எழுதும் அறைக்கு ‘ஸ்ட்ரெச்ச’ரில் அழைத்துச் சென்றனர்.
பின்னர் தேர்வு அறையில் தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு உதவியாளர் மூலம் அவர் தேர்வு எழுதினார்.
உடல் தளர்ந்து போனாலும் உள்ள உறுதியுடன் அவர் தேர்வு எழுதியது பாராட்டுக்குரியது என ஜாஸ்மினுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.