தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பொதுக்குழு கூடவிருக்கும் சூழலில் பாமகவில் பரபரப்பு

தைலாபுரத்தில் அன்புமணி: சமரசம் இல்லை ராமதாஸ் என திட்டவட்டம்

2 mins read
18af94e3-702f-4d69-82ae-c97117807750
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான அரசியல் மோதல் வலுத்து வரும் வேளையில் விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு எதிர்பாராதவிதமாக வருகையளித்துள்ளார் அன்புமணி. - படம்: தமிழக ஊடகம்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையேயான அரசியல் மோதல் வலுத்து வரும் வேளையில் விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள  ராமதாஸ் இல்லத்திற்கு  எதிர்பாராதவிதமாக வருகையளித்துள்ளார் அன்புமணி.

இந்நிலையில், இன்று பாமக நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் நடத்தவிருக்கும் பொதுக்குழு சட்ட ரீதியாகவும், கட்சியின் விதிமுறைகள் படியும் செல்லாது என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், அன்புமணியின் ஆதரவாளருமான பாலு தெரிவித்திருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதால், இது கட்சியிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று அன்புமணி சென்றதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.

அதில் அன்புமணி பாமக நிறுவனர் ராமதாசின் மனைவியும் தனது தாயாருமான சரஸ்வதி அம்மாளின் பிறந்தநாளையொட்டி அவர்களது இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயாரின் பிறந்தநாளையொட்டி மனைவி சவுமியா, மகன்கள், பேரக்குழந்தைகளுடன் அன்புமணி சென்று தம் தாயாரை சந்தித்து வாழ்த்து கூறி நல்லாசி பெற்றார்.

மேலும் இந்த நிகழ்வின்போது, தைலாபுரம் இல்லத்தில் அன்புமணி தந்தை ராமதாசுடன் சமாதான முயற்சியில் ஈடுபட்டதாகவும் உள்ளூர் ஊடகச் செய்திகள் கூறின. 

கட்சியின் முக்கியத் தலைவர்களான இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரும் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் காத்திருக்கும் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மத்தியில் அன்புமணியின் இந்தத் திடீர் வருகை ஆனந்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் ஆக அண்மையத் தகவலாக அன்புமணியுடன் சமரசம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவ்வாறு வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார் ராமதாஸ்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்களைச் சந்தித்த ராமதாஸ், சமரசம் என்பது சில விஷமிகள் பரப்பிய பொய்யான தகவல்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும் திட்டமிட்டப்படி பொதுக்குழு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெறும் என்றும் அதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதிபட கூறினார் ராமதாஸ்.

குறிப்புச் சொற்கள்