சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மே 5, 6ஆம் தேதிகளில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
வழக்கம்போல், இந்த ஆண்டும் கத்திரி வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றாலும், அவ்வப்போது கோடை மழை பெய்து குளிர்விக்கும் என்றும் வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கேற்ப கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த போதிலும், சில மாவட்டங்களில் தொடர்ந்து கோடை மழை பெய்தது. ஆனால், அந்த மாவட்டங்களில் குளிர்ச்சி நிலவியது.
அக்னி நட்சத்திரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு நிலையத் தரவுகள் ஏதும் இல்லை என்றாலும், இந்த ஆண்டு மே 28ஆம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மெல்ல அதிகரித்த நிலையில், கடந்த இரு நாள்களாக கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வானிலை நிலவரம் மாறி, மிதமான மழை பதிவானது.
இந்நிலையில் திங்கட்கிழமை (மே 5), ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய அடுத்த நாளே, மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் கூறியதாக ஏசியாநெட் செய்தி ஊடகம் தெரிவிக்கிறது.
இதற்கிடையே, போக்குவரத்து காவல்துறையினர், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் கத்திரி வெயில் காலத்தின் இறுதி நாள்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாய் குறையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் எனக் குறிப்பிடப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.