சென்னை: தொழில்நுட்ப, ஆய்வு, உருவாக்கத்தில் ஆதரவு வழங்கி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளை நவீனமயமாக்க சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐஐடி) உதவவிருக்கிறது.
இதற்காக மின்சார உற்பத்தி, விநியோகம், உள்கட்டமைப்பு மேம்பாடு, செயல்திறன் அதிகரிப்பு, ஆய்வுத் திட்டங்களை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு பிரிவுகளில் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒத்துழைப்பின்கீழ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவுப் பகுப்பாய்வு உள்ளிட்ட மின்னிலக்கத் தொழில்நுட்பங்களை மின்வாரியத்தில் நடைமுறைப்படுத்த ஐஐடி உதவவுள்ளது.
“மின்வாரியத்தின் சவால்களைச் சமாளிக்க வலுவான தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக மின்வாரியத்தில் ஒரு புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஐஐடி சென்னை வல்லுநர் குழுவினர், மின்வாரியத்தின் மூத்த பொறியாளர்களுடன் இணைந்து தலைமை அலுவலகத்தில் பணியாற்றுவர்,” என தமிழக மின்துறை அமைச்சர் ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக, தற்போதுள்ள கொள்கைகளை மதிப்பிடுதல், அனல்மின் நிலையங்களின் செயல்திறனை ஆராய்தல், கூரைகளில் சூரிய மின்சக்தித் திட்டங்கள், வாகன மின்னூட்டு நிலையங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் அந்த வல்லுநர் குழு ஆலோசனை வழங்கவுள்ளதாக அவர் கூறினார்.
“இது ஒரு தொடர் செயல்முறையாக இருக்கும்; இருப்பினும், மின்வாரியத்திற்குள்ளேயே ஒவ்வொரு பணிக்காகவும் நாங்கள் சில குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயித்துள்ளோம், அதைத் தொடர்ந்து கண்காணிப்போம்,” என்றும் திரு நிர்மல்குமார் குறிப்பிட்டார்.
நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தமிழ்நாடு மிக விரைவில் மின்மிகை மாநிலமாக மாறும் என்று ஐஐடி சென்னை இயக்குநர் வி.காமகோடி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மின்விநியோகக் கட்டமைப்பில் இணையப் பாதுகாப்பை உறுதிசெய்வது, நிகழ்நேர மின்பகிர்வுக் கட்டமைப்பைக் கண்காணிப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைத் தடையின்றி ஒருங்கிணைப்பது போன்ற அதிநவீன பணிகளில் மின்வாரிய ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் திறன் மேம்பாட்டு வகுப்புகளும் ஐஐடி மூலம் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

