வேளாண் வரவுசெலவுத் திட்டம்: சூரிய மின்சக்தி, பயிர் சேத இழப்பீடு, பயிர்க் காப்பீடு திட்டங்களுக்கு முன்னுரிமை

2 mins read
fc70c42f-a38a-47fe-9fd5-9faf73992183
சூரிய சக்தியால் இயங்கும் ‘பம்ப் செட்’கள் விவசாயிகளுக்கு 60 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும் என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வகையில், சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் நீர் பாய்ச்சும் ‘பம்ப் செட்’களை வழங்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய சக்தியால் இயங்கும் ‘பம்ப் செட்’கள் விவசாயிகளுக்கு 60 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும் என்றும் மின் ‘மோட்டார் பம்ப் செட்’கள் ரூ.15,000 வரை மானியமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழக வேளாண்துறை வரவுசெலவுத் திட்டத்தை, சட்டப்பேரவையில் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்து பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் உள்ள 20.84 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,631.53 கோடி பயிர் சேத இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், 30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5,242 கோடி நிதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“தமிழகத்தில் கடந்த 2019-2020ஆம் ஆண்டில் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடிப் பரப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

“பயிர் உற்பத்தித்திறனை உயர்த்திடும் முயற்சியில், பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தி, வேளாண் பயிர்களில் தமிழ்நாடு தற்போது இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தித்திறனில் முதல் இடத்திலும் மக்காச்சோளம், எண்ணெய் வித்துகள், கரும்பு ஆகியவற்றில் இரண்டாம் இடத்திலும் நிலக்கடலை, குறுதானியங்கள் உற்பத்தித்திறனில் மூன்றாம் இடத்திலும் உள்ளது,” என்று அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடந்த 2024ஆம் ஆண்டு வரை 346 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி அடையப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாசனப் பகுதிகளில் தூர்வாரவும் திறந்தவெளி பாசனக் கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் கட்டவும் கிராமப்புற இளையர்களுக்கு இயந்திரங்களை கையாள்வதற்கான பயிற்சி அளிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும், வேளாண் பொருள்களைப் பதப்படுத்த, மதிப்பு கூட்டுதலுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்