சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது திங்கட்கிழமை (நவம்பர் 16) புயலாக வலுப்பெற்று, நவம்பர் 17ஆம் தேதி தீவிரப் புயலாக மாறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு, அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வலுவடைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஏறக்குறைய சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்குத் திசையில் ஏறக்குறைய 860 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதுதொடர்ந்து வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ஆம் தேதி ‘அக்வான்’ புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரும் புயல், நவம்பர் 17ஆம் தேதியன்று தீவிரப் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயலின் நகர்வு வேகம், கரையைக் கடக்கும் திசை ஆகியவற்றை வானிலை மையம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இந்தப் புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், புயல் கரையை நெருங்கும்போது ஏற்படும் வானிலை மாற்றங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளைப் பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து, பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
