தமிழ்மொழி மேம்பாட்டிற்கு ஏஐ பயன்படுத்தப்படும்: பழனிவேல் தியாகராஜன்

2 mins read
a8b7decb-ba05-4499-8030-2dfd54222a76
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து தமிழக அரசு செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அளவில் பேசப்படும் மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்த மத்திய அரசு ‘பாஷினி’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்த உதவும் தொழில்நுட்பக் கருவிகள், செயலிகள், மென்பொருள்களை உருவாக்க மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதன் பலனாக வாரணாசியில் நடைபெற்ற ‘காசி தமிழ் சங்கமம் 2’ நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி ஆற்றிய உரை ‘பாஷினி’ செயலி மூலம் உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இது மொழி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், ‘பாஷினி’ திட்டக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் நாக் தலைமையிலான குழுவினர், அண்மையில் தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்தனர்.

அப்போது தமிழக அரசுக்கும் திட்டக் குழுவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவானதாகவும், மேலும், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ‘பாஷினி’ குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

“மேலும், மின்னிலக்க உலகில் பரவலாகத் தமிழ் மொழியை விரிவுபடுத்தவும் முடியும் என்கிற வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்