கோவை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழகத்தில் 2,500 யானைகள் ரயில் தண்டவாளங்களைப் பாதுகாப்பாக கடந்துள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ரயில் மோதி உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த துயரத்துக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த 2024 பிப்ரவரி மாதம் கோவை மாவட்ட மதுக்கரை வனப்பகுதியில் ரூ.7.24 கோடி மதிப்பில், ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்பு நிறுவப்பட்டது.
இதற்காக 12 கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டன. இதற்கான கட்டுப்பாட்டு அறையை வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் நிகழ்நேரத்தில் யானைகளைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“இதன்மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கை தகவல்கள் வனத்துறை, ரயில்வே அதிகாரிகளுக்குப் பகிரப்பட்டு யானைகள் மீது ரயில் மோதாமல் தடுக்க ஏஐ தொழில்நுட்பம் உதவுகிறது,” என்றார் சுப்ரியா சாகு.
கடந்த ஓராண்டில் மட்டும் ஏஐ அமைப்பு 5,011 முறை எச்சரிக்கை செய்துள்ளது என்றும் இதன் மூலம் சுமார் 2,500 யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனவிலங்குகள் பாதுகாப்பில் வனத்துறையும் ரயில்வே துறையும் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளன.