சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவைத் தொடர்ந்து மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திமுக மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருப்பதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும் எனவும் மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 68,144 வாக்குச்சாவடிகளுக்கும் தலா மூன்று மகளிர் உள்ளிட்ட தலா ஒன்பது நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றும் பழனிசாமி வலியுறுத்தினார்.
“அதிமுக தலைமையில் நிச்சயம் வலிமையான கூட்டணி அமையும். கடந்த தேர்தலில் வெறும் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழந்தோம். இதை மனதிற்கொண்டு மாவட்ட செயலாளர்கள் உற்சாகமாக பணியாற்ற வேண்டும்,” என்றார் திரு பழனிசாமி.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனுக்கு முதல்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அண்மைக்காலமாக இவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமான உறவில் இல்லை எனக்கூறப்படுகிறது. கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதையும் மற்ற தலைவர்களுடன் பேசுவதையும் தவிர்த்து வந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.