அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: 20 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு

அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: 20 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு

2 mins read
9497a379-a3d2-4cb1-85e3-2f0a86333da2
(இடமிருந்து) எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, வி.வி.ராஜன் செல்லப்பா - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 20 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ஆம் தேதி தொடங்கும். கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் வி.வி.ராஜன் செல்லப்பாவும் போட்டியிடுகின்றனர்.

கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் இம்முறை களமிறங்க உள்ளனர்.

தற்போது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 23 பேரில், 16 பேர் நடப்பு சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக உள்ளனர். ஒருவர் எம்பியாக உள்ளார்.

அதி​முக ஆட்​சிக்கு வந்தால், இலவச குளிர்பதன சாதனம் (ஃபிரிட்​ஜ்), குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம், ஆண்​டுக்கு மூன்று சமையல் எரிவாயு கலன் இலவசம் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக எடப்பாடி பழனி​சாமி தேர்​தல் வாக்​குறு​தி​ அளித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரசுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

குறிப்புச் சொற்கள்