சென்னை: அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்ததாகச் சரித்திரம் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், அதிமுக பலம் பொருந்திய கட்சி என்றும் அதன் பலம் எப்போதும் குறைந்துவிடாது என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தேர்தலில் தோற்றோம் என்றும் பாஜக தீண்டத்தகாத கட்சி என்றும் கூறியவர்கள் எல்லாம் தற்போது தங்களுடன் கூட்டணி வைக்க தவம் கிடப்பதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அண்ணாமலை யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் தேவையின்றி அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.