அதிமுக இரு தனிக்கூட்டங்கள்; கட்சியில் பிளவு எனத் தகவல்

அதிமுக இரு தனிக்கூட்டங்கள்; கட்சியில் பிளவு எனத் தகவல்

2 mins read
சி.வி. சண்முகம் தலைமையில் தனிக்கூட்டம் நடத்திய 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்; அதிமுக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிச்சாமி
b3ee45b4-a9a2-41bb-a61d-12413c2369a9
அதிமுகவில் சி.வி.சண்முகம் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் ரகசிய ஆலோசனை நடத்தியதாக செய்தி வெளிவந்துள்ளது. - படம்: சமயம் தமிழ்
multi-img1 of 2

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாக ஆலோசனை நடத்தியது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமியின் முடிவிற்கு எதிராக தவெக-விற்கு ஆதரவு அளிப்பதற்காக சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனை நடத்தியிருப்பது கட்சியில் பிளவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுகவில் குழப்பங்கள் அதிகரித்துள்ளன. புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சனிக்கிழமை (மே 9) சென்னை திரும்பினர்.

அதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர், சி.வி. சண்முகம் தலைமையில் கிட்டத்தட்ட 36 எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளிவந்தன. இரு கூட்டங்களும் ஒரே நாளில் நடைபெற்றது கட்சிக்குள் இருக்கும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு அதிமுகவின் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்தி வெளிவந்தது.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையிலான அந்த அணியினர், தவெகவுடன் கூட்டணியமைக்க விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்ததையடுத்து கட்சியின் முக்கியத் தலைவர்களிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது

முன்னதாக, திமுக-அதிமுக கூட்டணி ஆட்சி குறித்த செய்தியை மறுத்த இடதுசாரித் தலைவர் எம்.ஏ. பேபி, அதிமுக ஆட்சி அமைக்கக் காய்நகர்த்தியது உண்மை என்று தெரிவித்திருந்தார். பாஜக ஆதரவுடன் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரமுயன்றால், அதைத் தடுக்க இடதுசாரிகள் கடுமையாகப் போராடுவோம் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, “ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டு, அதிமுக ஆட்சி அமைப்பது பற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

குறிப்புச் சொற்கள்