அதிமுக: ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கும் வீரர்களுக்கும் காப்புறுதி, நிதியுதவி

1 mins read
08420c06-32e1-4ce4-b8e2-a70b7e6d0617
நாமக்கல் அருகே சாலப்பாளையம் சிற்றூரில் செவ்வாய்க்கிழமை அதிமுக சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு. - படம்: இந்து தமிழ் திசை

நாமக்கல்: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் காப்புறுதி வசதிகள் செய்துதரப்படும். அத்துடன், காளைகள் முட்டி உயிரிழக்க நேரிட்டால் அவர்கள் குடும்பங்களுக்கு அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கும் என அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாமக்கல் அருகே சாலப்பாளையம் சிற்றூரில் செவ்வாய்க்கிழமை அதிமுக சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

அந்தப்போட்டியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் காப்புறுதி எடுக்கப்படும். அத்துடன் ஏதேச்சையாக காளைகள் முட்டி, மாடுபிடி வீரர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்.

சாலப்பாளையம் ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுகளை அடக்கிய வீரர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளுக்கு விழாக் குழுவினர் சார்பில் சைக்கிள், கட்டில் மெத்தை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா, விஜயபாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், சந்திரசேகர் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்