கோவை: அதிமுக தலைவர்கள் பலர் தன்னை இன்னும் திட்டிக்கொண்டிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக தாம் அமைதி காப்பதாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
அவரது இந்தப் பேட்டி அதிமுக, பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மோடியும் அமித்ஷாவும் தூய அரசியலைக் கொடுப்பர் என்ற எதிர்பார்ப்போடு அரசியலில் பயணம் செய்கிறேன். தமிழகத்தில் நல்ல அரசியல் கூட்டணி அமைய இன்னும் காலம் இருக்கிறது.
“நான் ஒரு தொண்டனாக இருக்கிறேன். பிடித்திருந்தால் இருக்கப் போகிறேன்; பிடிக்கவில்லை என்றால் கிளம்பப் போகிறேன். நான் காத்திருக்கத் தயார்,” என்றார் அண்ணாமலை.
தாம் முதல் தலைமுறை அரசியல்வாதி எனக் குறிப்பிட்ட அவர், தம்மால் ஒரு கட்சியைத் துவங்கி நடத்த முடியும் என்பது சாத்தியமற்றது என்றார்.
பிரதமர் மோடி மீது தாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த நம்பிக்கை இம்மியளவும் குறையாது என்றார்.
சில நேரங்களில் தலைவர்கள் சொல்வதால் மனசாட்சிக்கு எதிராகப் பேச வேண்டியிருப்பதாகவும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“இப்போது வரை அதிமுக குறித்து நான் எதுவும் பேசவில்லை. ஆனால், அக்கட்சியினர்தான் என்னை வசைபாடுகிறார்கள். காலம் வரும்போது பேசுவேன்,” என்று அண்ணாமலை மேலும் கூறினார்.

