சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தமிழகச் சட்டமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் இடம்பெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தைக் கண்டித்து, அதிமுக உறுப்பினர்கள் கடந்த மூன்று நாள்களாகவே சட்டமன்றத்திற்குக் கறுப்புச் சட்டை அணிந்து வந்தனர்.
அவ்விவகாரம் தொடர்பில் கடும் அமளியில் ஈடுபட்ட அவர்கள், அவையிலிருந்தும் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 26) சட்டமன்றம் கூடியதும் மீண்டும் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பில் விவாதம் நடத்த வலியுறுத்தி, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் இறங்கினர்.
இதனையடுத்து, “எட்டு நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்துள்ளீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன். கேள்வி நேரத்திற்குப் பின்பு பேச அனுமதி தருகிறேன்,” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
ஆயினும், அதிமுகவினர் அதற்கு இணங்காததால் அவர்களை மன்றத்திலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
அத்துடன், நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத வகையில், அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்தும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவை நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்ததால் சட்டமன்ற விதிகளின்படி அதிமுக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய அவை முன்னவர் தீர்மானத்தை முன்மொழிந்தார். அது நிறைவேற்றப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

