சென்னை: வரும் சட்டபேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 65 தொகுதிகள் கேட்பதால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. பாஜகவை எப்படியும் சமாதானப்படுத்தி 25 தொகுதிகள் கொடுக்கலாம் என அதிமுக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
எஞ்சிய 16 தொகுதிகளில் பாஜகவுக்கு இரண்டாமிடம் கிடைத்தது. அடுத்து, மக்களவைத் தேர்தலில் அதிமுக விலகிய நிலையில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டது.
இதில் 12 தொகுதிகளில் இரண்டாமிடம் பெற்ற கட்சிக்கு, சட்டப்பேரவைத் தொகுதி வாரியான வாக்குகளில் 59 தொகுதிகளில் இரண்டாவது இடத்தில் வந்தது.
இவற்றை முன்னிறுத்தி பாஜகவின் தேசியத் தலைமை அதிமுகவிடம் 65 தொகுதிகள் கேட்டுள்ளது. இதற்கு வலுவான காரணமாக தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக கட்சித் தலைமை குறிப்பிட்டுள்ளது.
அண்மையில், பிரதமர் மோடியின் மதுராந்தகம் கூட்டத்துக்கும் சுமார் 5 லட்சம் பேர் வந்ததாகவும் அவர்களில் பாஜகவினர் மட்டுமே சுமார் 3 லட்சம் என்பது தங்கள் கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டுவதாகவும் பாஜக வாதிட்டு அதிகமான தொகுதிகள் கேட்கிறது.
இந்நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து பாஜகவினர், “இதுவரை எங்களுக்கு எவ்விதத் தகவலையும் தெரிவிக்கவில்லை. நட்புரீதியாக அதிமுகவின் முக்கிய தலைவர்களிடம் பேசும்போது, முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இப்போது அதைவிட 5 தொகுதிகள் கூடுதலாகக் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக பாஜகவின் முக்கிய மற்றும் பிரபல தலைவர்கள் அனைவரையும் களமிறக்க பாஜகவின் தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் களமிறக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இவர்களுடன் பிற பிரபலங்களான பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம், செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஆன்மிகப் பிரிவின் தலைவர் எம்.நாச்சியப்பன், எஸ்.ஜே.சூர்யா, குஷ்பு, பொன்னார், கே.டி.ராகவன் உள்ளிட்டோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் என சில பிரபலங்களையும் பாஜக களமிறக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியை இறுதி செய்துவிட்ட சூழலில், இன்னும் ஓரிரு கட்சிகள் கூட்டணிக்குள் வரலாம் என்பதால், தொகுதிப் பங்கீடு தொடர்பான விவரங்கள் வெளியிடுவதை அதிமுக சுணக்குகிறது என்று கூறப்படுகிறது.

