சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சிரமத்துக்கு ஆளான சம்பவத்துக்கு மாநில அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
வெள்ளிக்கிழமை (ஜூன் 6) இரவு 9 மணிக்கு மேல் தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருக்கோவிலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேவகோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அதனால் 2,000க்கும் மேற்பட்ட பயணிகள் குடும்பத்துடன் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். பொறுமையிழந்த அவர்கள் அனைவரும் இரவு 11 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் தேங்கின.
அந்தச் சம்பவத்தின் தொடர்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால் அதுவும் இல்லை.
“இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை. பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா,” என கேள்வி எழுப்பி உள்ளார்.
கிளாம்பாக்கத்தில் பேருந்து இல்லாமல் பயணிகள் சிரமப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் கைக்குழந்தைகளுடன் அலைக்கழிக்கப்பட்டிருப்பது மன வேதனையளிப்பதாகக் கூறியுள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்து உள்ள கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையம், கடந்த 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. தென்மாவட்ட பயணிகள் இந்தப் பேருந்து நிலையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.