திருச்சி: ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திடீரென நின்று போனதால் பயணிகள் இடையே பதற்றம் ஏற்பட்டது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் நின்றுபோனதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் இருந்த 176 பயணிகள் நிம்மதி அடைந்தாலும், அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு அவர்கள் யாரும் விமானத்தை விட்டு கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை.
திருச்சியில் இருந்து ஐக்கிய அமீரகத்தின் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவை வழங்கி வருகிறது. வழக்கமாக அதிகாலை 4.25 மணிக்கு அந்த விமானம் திருச்சியில் இருந்து புறப்படும்.
எனினும், புதன்கிழமையன்று (செப்டம்பர் 3) காலை 5.45 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. தாமதமாகப் புறப்பட்ட இந்த விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது திடீரென வேகம் இழக்கத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில், அந்த விமானத்தால் மேலெழுந்துப் பறக்க இயலாது என்பதை உணர்ந்த தலைமை விமானி, ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்திவிட்டார். இதனால் பயணிகள் பதற்றம் அடைந்தனர்.
மேலும், விமானம் நின்ற பிறகு அடுத்த இரண்டு மணிநேரத்துக்கு பயணிகள் யாரும் அதிலிருந்த இறங்க அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து, மாற்று விமானம் வரவழைக்கப்பட்டு பயணிகள் சார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் ஓடுபாதையில் நின்றுபோனதாக மணப்பாறையைச் சேர்ந்த சர்தார் பாட்ஷா என்ற பயணி ஊடகங்களிடம் விவரம் தெரிவித்தார்.

