தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை விமான நிலையம் அருகே விமானப் பாதுகாப்பு ஒத்திகை

2 mins read
bb0e291a-40b6-4e88-b2c3-f8a905d3cfab
ஏறத்தாழ 300 பேர் பங்கேற்ற பயிற்சியில் 55 பேர் விமானப் பயணிகள் போல பாவனை செய்தனர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னை விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதியில் அவசரநிலை மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது.

அகமதாபாத் விமான விபத்திற்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் மீட்புப் பணிகள் மற்றும் அவசரகால செயல்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பான ஒத்திகையை மேற்கொள்ள வேண்டும் என இந்திய விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதற்கிணங்க, சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அருகே சனிக்கிழமை (ஜூன் 28) விமான விபத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

விமானம் போன்ற வடிவமைப்பு தீயில் பற்ற வைக்கப்பட்டது. அதன் பிறகு, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைப்பது போன்ற பயிற்சியில் ஈடுபட்டனர். 

மேலும் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினர் வந்து விபத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்டு முதலுதவி அளிக்கும் பணியில் ஈடுபடுவது போன்ற ஒத்திகை தத்ரூபமாக நடத்தப்பட்டது.

ஏறத்தாழ 300 பேர் ஈடுபட்ட பயிற்சியில் 55 பேர் விமானப் பயணிகள் போல பாவனை செய்தனர்.

பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சியை பொதுமக்கள் சுற்றி நின்று பார்வையிட்டனர்.

விமானப் போக்குவரத்துத் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை, நுண்ணறிவுப் பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, பேரிடர் மீட்புப் படை ஆகியன உள்ளிட்ட பத்து துறைகள் இணைந்து அந்தப் பயிற்சியை நடத்தின.

விமான விபத்து ஏற்பட்டால் மின்னல் வேகத்தில் செயல்படுவதற்கான பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

விமானப் பயணிகள் பாதுகாப்பு ஒத்திகை குறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் சி.வி.தீபக் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பொதுவாகவே ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது இயல்பான ஒன்றுதான்.

“இருப்பினும், அகமதாபாத் விபத்துக்குப் பிறகு அதேபோன்ற விபத்து நடந்தால் எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறோம்; எப்படி செயல்படுகிறோம் என்பது குறித்த ஒத்திகை இது.

“ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்தான். இந்த முறை முதல் முறையாக வெளி இடத்தில் ஒத்திகை நடைபெற்றுள்ளது,” என்றார். 

குறிப்புச் சொற்கள்