சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை, ரூ.9,445 கோடியில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் மொத்தம் 13 ரயில் நிலையங்கள் அமைகின்றன. திட்ட அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது 54 கிலோ மீட்டர் துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் இந்த தூரம் மேலும் 15.5 கி.மீ. அதிகரிக்கும்.
கடந்த 2018ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின்படி திட்ட மதிப்பீடு ரூ.4,080 கோடியாக இருந்தது.
பணியைத் துவக்குவதில் ஏற்பட்ட தாமதம், வடிவமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக தற்போது திட்ட மதிப்பீடு, 9,445 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மெட்ரோ ரயில் பாதை, மேம்பாலப் பாதை, மெட்ரோ ரயில் பணிமனைப் பணிகளை மேற்கொள்ள இத்தொகை செலவிடப்படும்.
பணியாணை வழங்கிய அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த திட்டப்பணிகள் முடியும். பயணியரின் வருகைக்கேற்ப, நான்கு அல்லது ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்கப்படும்.