சென்னை: தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது, ஒரு வாகனத்தில் இருந்து நவீனத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தற்போது மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
அனுமதியின்றி, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம், நகைகள், விலையுயர்ந்த பொருள்கள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை அசோக் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சிறிய வேன் ஒன்றைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் பத்துக்கும் மேற்பட்ட ‘ஏகே-47’ ரகத் துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பறக்கும் படையினர், வாகன ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவை திரைப்படப் படப்பிடிப்புக்காகக் கொண்டு செல்லப்பட்ட போலித் துப்பாக்கிகள் எனத் தெரியவந்தது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கும் படப்பிடிப்புக்காக கொண்டு செல்லப்படும் போலித் துப்பாக்கிகளைப் பின்னர் சென்னை வடபழனி பகுதியில் உள்ள கடையில் ஒப்படைத்திருப்பதாக ஓட்டுநர் கூறினார்.
இதையடுத்து, போலித் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கான உரிமம் உள்ளதா என்பதைச் சரிபார்த்த பின்னர் அந்த வாகனத்தை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, சென்னையில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவலால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

