மதுரை: மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைமைக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அண்மையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது, முதல்வரைச் சந்திக்க அவர் தங்கியிருந்த தங்குவிடுதிக்கு அழகிரி ஆதரவாளர்கள் நேரில் சென்றனர் .
அவர்களில் மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனை மட்டும் முதல்வர் சந்தித்தார். அப்போது, அழகிரி ஆதரவாளர்கள் சார்பாக மன்னிப்புக் கடிதம் ஒன்றை அவர் ஸ்டாலினிடம் அளித்ததாகத் தெரிகிறது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், கடந்த 12 ஆண்டுகளாக திமுக விசுவாசிகளாகவே தாங்கள் நீடித்து வருவதாகவும் வேறு கட்சிக்கு செல்ல விருப்பமின்றி திமுகவிலேயே இருப்பதாகவும் அக்கடிதத்தில் அழகிரி ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“திமுகவில் எங்களை மீண்டும் இணைத்துக்கொள்ளுங்கள் எனக் கோரி முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். தேர்தலுக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். எங்களுடைய இந்த நிலைப்பாட்டுக்கு அழகிரி தடையாக இருக்க மாட்டார்,” என்றார் மன்னன்.

