மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 15,16ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைவிட அதிக பரிசுகள் வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டுக்கான போட்டியை துணை முதல்வர் உதியநிதி தொடங்கி வைப்பார் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இவற்றுள் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை. இம்மூன்று போட்டிகளும் தமிழக அரசின் ஆதரவுடன் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, அலங்காநல்லூர் போட்டியைக் காண வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வருகின்றனர்.
முதல் பரிசு பெறும் காளை மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் கார், இருசக்கர வாகனங்கள், தங்கக்காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான போட்டிகள் விரைவில் தொடங்கும் என்பதற்கான அறிகுறியாக போட்டி நடைபெறும் இடத்தில் பந்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, அரசு மட்டுமல்லாமல், நன்கொடையாளர்களிடமும் பெறப்படும் பரிசுகள் வீரர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
“இந்த ஆண்டு மதுரையில் இரண்டு இடங்களில் நடைபெறும் போட்டிகளில் சுமார் 800 முதல் 900 காளைகள் வரை களமிறக்கப்பட உள்ளன.
“இணையம் மூலமாக காளைகள், மாடுபிடி வீரர்களின் பதிவு நடைபெறும். உடல் தகுதி அடிப்படையில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்,” என்று அமைச்சர் பி.மூர்த்தி மேலும் தெரிவித்தார்.