தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; திமிறிய காளைகள், அடக்கிய வீரர்கள்

2 mins read
cd790c77-b6b8-456d-841c-d9df9ff3eb37
இந்த ஆண்டு அலங்காநல்லூரில் ஆயிரம் காளைகள் களமிறக்கப்பட்டன. அவற்றை அடக்குவதற்கு 750 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர்.  - படம்: ஊடகம்

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வியாழக்கிழமை (ஜனவரி 16) சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத் துணை முதல்வர் உதயநிதி இதைத் தொடங்கி வைத்து, தனது மகன் இன்பநிதியுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ரசித்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் திருநாளில் (ஜனவரி 14) அவனியாபுரத்தில் நடைபெற்றது.

அதையடுத்து மறுநாள் பாமேட்டிலும் வியாழக்கிழமை அன்று அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெற்றன.

இம்முறை மாடுபிடி வீரர்களுக்கும் அடக்கமுடியாத காளைகளுக்கும் கார், டிராக்டர், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், தங்கக்காசு உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு அலங்காநல்லூரில் ஆயிரம் காளைகள் களமிறக்கப்பட்டன. அவற்றை அடக்குவதற்கு 750 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர்.

பல்வேறு சுவாரசியங்களுக்கு மத்தியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இம்முறை 16 பெண்களும் நான்கு திருநங்கையரும் தங்களுடைய காளைகளைப் போட்டியில் பங்கேற்க வைத்தனர்.

வழக்கமாக இப்போட்டியைக் காண வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வருவர்.

இந்நிலையில், அயர்லாந்தைச் சேர்ந்த ஆடவர் தான் களமிறங்க விரும்புவதாகக் குறிப்பிட்டு விண்ணப்பம் அளித்திருந்தார். எனினும், போட்டியில் பங்கேற்க மருத்துவப் பரிசோதனைக்காக அவர் வந்தபோது, வயது காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.

துணை முதல்வர் உதயநிதி விழா மேடைக்கு வந்தபோது அவருக்கு மட்டுமல்லாமல், உடன்வந்த அவரது மகன் இன்பநிதிக்கும் திமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் இன்பநிதி தன் கையால் தங்கக்காசுகளைப் பரிசாக அளித்தார்.

இதற்கிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது மாடுபிடி வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், உடல் கூறாய்வுக்குப்பின் ஒப்படைக்கப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கில் எதிர்வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூரில் ஆர்.டி.மலையில் களைகட்டிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் 750 காளைகள் களமிறக்கப்பட்டன. 450 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர்.

சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரருக்குத் தமிழக முதல்வர், துணை முதல்வர் சார்பில் முறையே கார், இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்