அதிமுகவுடன் கூட்டணி என்பது பொய்த் தகவல்: விஜய் கட்சி விளக்கம்

1 mins read
6ef55b52-a170-4b58-91a6-e46a8b771dd6
பொய்யான கருத்துகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி என பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புபடுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

“ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புபடுத்திப் பரப்பப்படும் இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகைய பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

“தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்க தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கட்சித் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்