பாஜகவுடன் கூட்டணி என்பது திமுக பரப்பும் வதந்தி: தவெக

பாஜகவுடன் கூட்டணி என்பது திமுக பரப்பும் வதந்தி: தவெக

2 mins read
7110a61f-d123-4761-bcca-574e1268be76
எந்த ஒரு கட்சியுடனும் தவெக கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று அந்தக் கட்சி மறுத்துள்ளது. - படம்: மாலைமலர்

சென்னை: எந்த ஒரு கட்சியுடனும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

நடிகர் விஜய் தலைவராக உள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஊடகங்களில் செய்திகள் பரவின.

கூட்டணியில் இணைந்தால் தவெகவுக்கு 80 தொகுதிகளும் துணை முதலமைச்சர் பதவியும் ஒதுக்கப்படும் என்று பேரம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் பகிரப்பட்டன.

ஆனால், அப்படி எந்த ஒரு முயற்சியும் நடைபெறவில்லை என்று தவெக மறுத்துள்ளது.

அந்த விவகாரம் தொடர்பாக நிர்மல் குமார் திங்கட்கிழமை (மார்ச் 16) தமது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை. வதந்திகளை நம்பவேண்டாம்,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “அண்மைக்காலமாக சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

“குறிப்பாக, பாஜக / அஇஅதிமுக அல்லது சசிகலா, மருத்துவர் ராமதாஸ் ஆகியோரை தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

“குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையும் எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“இதேபோன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

“இருப்பினும், பொதுமக்களிடையேயும் தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.

“பொறுப்புள்ள ஊடகங்களும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரும் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்,” என்று நிர்மல் குமார் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்