சிவகங்கை: அமெரிக்கப் பள்ளி மாணவர் ஒருவர் ஆர்வத்துடன் தமிழ் கற்பது சிவகங்கை மாவட்ட மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அங்குள்ள வெள்ளிகுறிச்சி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வகுமார் என்பவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினார்.
பின்னர், அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையாகிவிட்ட இவர், தமிழ்ப்பற்று மிக்கவர்.
பல ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தாலும் தன் மகன்களுக்கு மெல்வின் ராஜ்குமார், முருகன், சரவணன், கோபி எனத் தமிழில் பெயர் சூட்டியுள்ளார்.
மூத்த மகன் மெல்வின் ராஜ்குமார் அமெரிக்காவில் 7ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், இரண்டு மாத விடுமுறை கிடைத்ததால் தந்தையுடன் அவரது சொந்த ஊரான வெள்ளிகுறிச்சி கிராமத்துக்கு அண்மையில் வந்துள்ளார்.
விடுமுறை என்பதால் இச்சிறுவன் விளையாட்டு, சுற்றுலா எனப் பொழுதைக் கழிக்கவில்லை. மெல்வினுக்குத் தமிழ் மொழி மீது ஆர்வம் அதிகம். தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மகன் விரும்பியதால் மகிழ்ச்சியடைந்த செல்வகுமார், மகனை வெள்ளிகுறிச்சி கிராம உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளார்.
தினமும் நேரம் தவறாமல் பள்ளிக்குச் சென்று தமிழ் எழுத்துகள், சொற்கள், வாசிப்பு, உச்சரிப்பு என அனைத்தையும் கற்றுத்தேறி வருகிறார் மாணவர் மெல்வின்.
உடன் படிக்கும் மாணவர்களுடன் நட்பாகப் பழகி வரும் இச்சிறுவன், தற்போது தமிழ் வார்த்தைகளை அழகாகவும் தெளிவாகவும் உச்சரிப்பதைக் கேட்டு சக மாணவர்கள் வியந்து போகின்றனர்.

