தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க வரிவிதிப்பு: ரூ.15,000 கோடி இழப்பை எதிர்கொள்ளும் திருப்பூர் நிறுவனங்கள்

2 mins read
2965ba11-0e29-42e2-8858-84d55a803e94
வெளிமாநிலங்கள், மாவட்டங்களைச் சேர்ந்த பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் திருப்பூர் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் தமிழகத்தின் திருப்பூர் பகுதியில் இயங்கி வரும் பின்னலாடை நிறுவனங்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.

வரிவிதிப்பு காரணமாக, இந்நிறுவனங்கள் ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.15 ஆயிரம் கோடி இழப்பைச் சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளதாக துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் ஆடைகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

அங்கு ஏற்றுமதி நிறுவனங்கள், உள்நாட்டு ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள், சாய ஆலை உட்பட 15,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

வெளிமாநிலங்கள், மாவட்டங்களைச் சேர்ந்த பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

நாள்தோறும் ரூ.200 கோடி மதிப்புள்ள ஆடைகள் உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் திருப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு 30% பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், புதிய வரிவிதிப்பு காரணமாக, ஆடைகளின் விலை அதிகரித்துள்ளது.

10 டாலருக்கு விற்கப்பட்ட பின்னலாடை, தற்போது குறைந்தபட்சம் 16 டாலருக்கு விற்கப்படுவதாகவும் இதனால் திருப்பூர் பின்னலாடை இறக்குமதியை அமெரிக்க வர்த்தகர்கள் நிறுத்தியுள்ளதாகவும் தமிழக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

ஏற்றுமதி குறைந்ததால், பின்னலாடை உற்பத்தியை திருப்பூர் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதன் மூலம் ஆடைகள் தேங்குவதைத் தடுக்க முடியும் என்று அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்க வரிவிதிப்பால், தமிழக ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஜவுளி மையமான திருப்பூரில் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தமது எக்ஸ் தளப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“புதிய வரிவிதிப்பால் ரூ.3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன. நமது தொழில்கள், தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம் வழங்குவதுடன், கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்,” என்று திரு ஸ்டாலின் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்