கும்பகோணம்: சேலம் பனைமரத்துப்பட்டியில் உள்ள கோவிலில் நிறுவுவதற்காக, கும்பகோணம் அருகேயுள்ள சத்திரம் கருப்பூரில் வடிவமைக்கப்பட்ட 38 அடி உயரம், 65 டன் எடையுடைய ஐம்பொன்னாலான ஆதிபராசக்தி அம்மன் சிலை சரக்குந்துமூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டியில் உள்ள பழைமையான ஆதிபராசக்தி கோவில் முகப்பில் 65 டன் எடையிலும் 38 அடி உயரத்திலும் ஐம்பொன்னாலான ஆதிபராசக்தி அம்மன் சிலையை நிறுவுவது என முடிவுசெய்யப்பட்டது. அச்சிலையை வடிவமைக்கும் பணி கும்பகோணம் அருகிலுள்ள சத்திரம் கருப்பூரில் உள்ள ‘தரணி மெட்டல்ஸ் அண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்திடம் 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதையடுத்து, தலைமைச் சிற்பி கோபு தலைமையில், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக சிலையை வடிவமைத்தனர்.
அப்பணி நிறைவடைந்ததையொட்டி, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) காலையில் மூன்று ராட்சத பாரந்தூக்கிகள் மூலம் லாரியில் 38 அடி உயர சிலை ஏற்றப்பட்டு, சிறப்புப் பூசைகள் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க சீரும் சிறப்புமாக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தச் சிலை மார்ச் 1ஆம் தேதி ஆதிபராசக்தி கோவிலைச் சென்றடையும் எனக் கூறப்பட்டது.
இதுகுறித்துச் சிலையை வடிவமைத்த தலைமைச் சிற்பி கோபு கூறுகையில் “ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்ட 65 டன் எடையுடைய ஆதிபராசக்தி அம்மன் சிலையின் மதிப்பு ரூ.10 கோடி. பனைமரத்துப்பட்டி கோயிலில் 13 அடி கருங்கல் பீடம் கட்டப்பட்டு, அதன்மீது இந்த சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது,” என்றார்.

