தவெகவுக்கு எதிராகப் பொது வேட்பாளர்கள்: அன்புமணி எச்சரிக்கை

தவெகவுக்கு எதிராகப் பொது வேட்பாளர்கள்: அன்புமணி எச்சரிக்கை

1 mins read
8ad1efba-e08c-4af6-8d8c-093f12f36fb0
அன்புமணி. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

புதுவை: அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் ஆளுங்கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்.

அத்தகைய முடிவை எடுக்கும் நிலைக்குத் தங்களைத் தள்ள வேண்டாம் என்று புதுவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

மக்களுடைய விருப்பத்துக்கு எதிராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்களை எந்தக் காரணமும் இன்றி திடீரென வெற்றி பெற்ற 20 நாள்களில் ராஜினாமா செய்ய வைத்து அடுத்த 10 நிமிடத்தில் தவெகவில் இணைத்துள்ளது ஜனநாயகப் படுகொலை என்று விமர்சித்த அவர், இத்தகைய செயலை தமிழக மக்கள் விரும்பவில்லை என்றார்.

கோடிக்கணக்கான இளைஞர்கள் ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய்யை வெற்றி பெற வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், அப்போது நடந்திருப்பது இளையர்களின் நம்பிக்கைக்கு எதிரான செயல் என்றார்.

“இது குதிரைப்பேரத்தைவிட மோசமானது. இடைத்தேர்தல் வந்தால் நான்கு வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம். அந்தளவுக்கு எங்களை தள்ளாதீர்கள்.

“மக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். கோடிக்கணக்கான இளைஞர்களும் இடைத்தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள்,” என்றார் திரு அன்புமணி.

குறிப்புச் சொற்கள்