பட்டினமருதூரில் பழங்கால உறைக்கிணறுகள் கண்டெடுக்கப்பட்டன

பட்டினமருதூரில் பழங்கால உறைக்கிணறுகள் கண்டெடுக்கப்பட்டன

1 mins read
908aaf23-6787-4b4c-a24f-b055127bc6c3
சீன நாட்டு நாணயங்கள், சீன பீங்கான் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது பட்டினமருதூர் அகழாய்வுப் பணியில் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

ஒட்டப்பிடாரம்: தமிழகத்தின் ஒட்டப்பிடாரம் பகுதிக்கு அருகே உள்ள பட்டினமருதூரில் நடைபெற்று வரும் அகழாய்வின்போது பழங்கால உறைக்கிணறுகள் கண்டெடுக்கப்பட்டன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றின்மூலம் பல அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பட்டினமருதூரில் கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல்கட்ட அகழாய்வுப்பணி தொடங்கியது. கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் குழிகள் தோண்டப்பட்டன. தற்போது அக்குழிகளில் இருந்து பழங்காலச் சங்குகள், பாசி மணிகள், அலங்கார வளைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் சங்குகளால் ஆன நகைகள், உறைக்கிணறுகள், கற்சுவர், சுடுமண் பீப்பாய் போன்ற வடிகால் குழாய்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அகழாய்வு ஆராய்ச்சி இயக்குநர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

சீன நாட்டு நாணயங்கள், சீன பீங்கான் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது பட்டினமருதூர் அகழாய்வுப் பணியில் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது.

இப்பகுதியில் ஏராளமான சங்குகள் கிடைத்து வருவதாகவும் ஏறக்குறைய 200 ஏக்கருக்கு மேலான பரப்பளவில் பெரிய சங்கு தொழிற்சாலை இயங்கி வந்திருக்கலாம் என்றும் தொல்லியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

முழு சங்குகளை அறுத்து, வளையல் உள்ளிட்ட நகைகளை உருவாக்கி ஏற்றுமதி செய்துள்ளனர் என்றும் இரு தரப்புக்கும் இடையே வர்த்தகத் தொடர்பு இருந்ததை சீன நாட்டு நாணயங்கள் உறுதிப்படுத்துவதாகவும் திரு அஜய் குமார் கூறியுள்ளார்.

சங்கு தொழிற்சாலை இயங்கி வந்துள்ளதை வைத்து இப்பகுதியில் திசையாயிரத்து ஐந்நூறு என்ற வணிகக்குழு இருந்திருக்கக்கூடும் என்றும் அக்குழுவின் காலத்தைக் கணிக்க நீடித்த அகழாய்வு ஆராய்ச்சி தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்