சென்னை: வாக்கு எண்ணிக்கையில் திமுக முதலிடத்தைத் தவறவிட்டு, இரண்டாவது மூன்றாவது இடத்துக்கு மாறி மாறி வந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் இழந்தனர்.
இந்தத் தொடக்கநிலை தடுமாற்றம் காரணமாக, சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களைத் திமுகவினர் அகற்றினர்.
கட்சித் தொண்டர்களின் வருகை இன்றி அறிவாலயம் வெறிச்சோடியது.
வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருந்த வேளையில், முழுமையான முடிவு வெளியாகும் முன்னரே அறிவாலயத்தி அமைக்கப்பட்டிருந்த கொண்டாட்ட ஏற்பாடுகள் அகற்றப்பட்டன.
பொதுவாக, வெற்றி நிலவரம் உறுதியாகத் தெரியும்வரை அரசியல் கட்சிகளின் கொண்டாட ஏற்பாடுகள் அகற்றப்படாது.
ஆனால், அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டங்களுக்காக கொண்டுவரப்பட்ட பொருள்கள் மற்றும் அமைக்கப்பட்ட பந்தல் அகற்றப்பட்டு வேனில் அவற்றை ஏற்றிக்கொண்டு செல்லும் காணொளிக் காட்சி இணையத்தில் பரவியது.
இருப்பினும், முதல் நாள் இரவு நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக அமைக்கப்பட்ட ஏற்பாடுகள் அவை என்றும் அவற்றுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அங்கிருந்த திமுக தொண்டர் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறினார்.

