அண்ணாமலை போட்டியிடவில்லை; வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக

அண்ணாமலை போட்டியிடவில்லை; வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக

2 mins read
24216623-f829-4942-b984-06f302a9a857
அவினாசியில் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியில், கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை போட்டியிடுகிறார்கள். - படங்கள்: தினமணி

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்குக் கடைசி நாள்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தைத் தொடங்கிவிட்ட வேளையில், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதை தாமதித்து வந்தது.

பட்டியல் தயாரிப்புப் பணி நடைபெற்றபோது, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடும் தொகுதிதான் இழுபறியாக இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

இது அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக வேட்பாளர் பட்டியலில் முக்கிய மாற்றங்கள்

பாஜக தமிழ்நாடு எக்ஸ் பக்கத்தில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில், மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி, அவினாசியில் எல். முருகன் போட்டியிடுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து, நீண்ட காலமாக பதவிக்காகக் காத்திருந்த விஜயதாரணிக்கு, விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி போட்டியிடுகிறார்.

மொடக்குறிச்சியில் தற்போதைய எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகள் கிருத்திகா சிவக்குமார் போட்டியிடுகிறார்.

தமிழக தேர்தலில் போட்டியிட பெண்கள் ஐவருக்கு பாஜக வாய்ப்பு அளித்துள்ளது.

27 பேரில், 8 முதல் 10 பேர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் பலரும் கூறுகின்றனர். எனினும் அதிமுகவின் ஒத்துழைப்பை பொறுத்தே பாஜகவின் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் கூறினர்.

பட்டியல் வெளியிடப்பட்டதுமே, வேட்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த அண்ணாமலை, வேட்பாளர்கள் வெற்றி பெற தோளோடு தோள் நின்று பிரசாரம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.
பட்டியல் வெளியிடப்பட்டதுமே, வேட்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த அண்ணாமலை, வேட்பாளர்கள் வெற்றி பெற தோளோடு தோள் நின்று பிரசாரம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார். - படம்: தினமணி

வேட்பாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து

பட்டியல் வெளியிடப்பட்டதுமே, வேட்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த அண்ணாமலை, தே.ஜ.கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற தோளோடு தோள் நின்று பிரசாரம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.

போட்டியிட விரும்பிய தொகுதியை ஒதுக்காததால் அண்ணாமலை வருத்தம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

நேரில் சந்திக்க அண்ணாமலைக்கு மோடி உத்தரவு

இந்நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி சனிக்கிழமை சென்னையில் நடத்தவுள்ள கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அண்ணாமலை கேரளாவில் இருந்து சென்னைக்கு விரைகிறார்.

குறிப்புச் சொற்கள்