சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவி விவகாரத்தில், அண்ணாமலையை நீக்கி, பாஜக தலைமை சரியான முடிவை எடுத்துள்ளதாக ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையின் உத்தரவுக்கு அண்ணாமலையும் உடன்பட்டதாக கருதத் தோன்றுகிறது என்றும் இந்த விவகாரத்தில் அவருக்கு அதிருப்தி ஏதும் இருப்பதாக தமக்குத் தெரியவில்லை என்றும் ஒரு பேட்டியில் குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைமையின் யுக்தியை அண்ணாமலை புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில் இருந்து வந்த பாஜக தற்போது நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலூன்றி உள்ளது. தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக வளர வேண்டும் என பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் பல உக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
“தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மிதமிஞ்சிய வேகத்தில் செயல்பட்டார் என்பதே அவரது பதவி நீக்கத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு களத்தில் இறங்கி அதிக அளவில் வேலை பார்க்க வேண்டியதை பாஜக தலைமை உணர்ந்துள்ளது.
“இதில், அண்ணாமலை தனது நலனுக்காகச் செய்து இருந்தாலும், கட்சியின் நலனுக்காகச் செய்திருந்தாலும் அது தவறாகி விட்டது. தமிழ்நாட்டில் ஒரு முக்கியச் சக்தியாக பாஜக மாறிவிட வேண்டும் என்பதே செயல் திட்டம்,” என்று குருமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.