சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றிய நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் அ.தி.மு.க.வை அண்ணாமலையால் அழிக்கவே முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சி என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு என்றுமே பகல் கனவுதான். அண்ணாமலை அழிவை நோக்கிச் செல்கிறார் என்பது அவரது பேச்சில் இருந்தே தெளிவாக தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கோட்டை பக்கமே வர முடியாத நிலைதான் தற்போது உள்ளது,” என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது. அண்ணாமலை ஒரு மேனேஜர் மட்டுமே. அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அண்ணாமலை மூன்று ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார். அண்ணாமலை விரக்தியில் அ.தி.மு.க.வுக்கு எதிராகப் பேசி வருகிறார். மின்மினி, விட்டில் பூச்சியை போலத் தான் அண்ணாமலை. ஆனால், அதிமுகவையும் அதிமுக தலைவர்களையும் விமர்சிப்பதிலேயே இருக்கிறார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ கிளைச் செயலாளர் பணியில் தொடங்கி அமைச்சர், முதல்வர் பதவியை எட்டியவர். கொடி பிடிக்கும் அடித் தொண்டன்கூட கொடி கட்டிய அரசு காரில் பவனி வர முடியும் என்றால் அதிமுகவில் மட்டுமே முடியும்.
ஆனால், அண்ணாமலையின் நிலைமை 7 நாள்கள் மட்டுமே வாழும் விட்டில் பூச்சி போன்றது. இந்த அளவுக்குதான் அவருடைய நிலைமை. இதனை மறந்துவிட்டு பாரம்பரியக் கட்சியும் 2026 இல் ஆட்சிக்கு வரும் மாபெரும் கட்சியைப் பற்றி பேச அண்ணாமலைக்கு எவ்விதத் தகுதியும் இல்லை.
கற்பனையில் மிதந்து கொண்டு அரசியல் செய்து வருகிறார் அண்ணாமலை. திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்று அண்ணாமலை தெரிவித்ததற்கு திமுக இதுவரை வாய் திறக்கவே இல்லை.
அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது, அதிமுகவை அழிக்க எண்ணி அதைத் தொட்டுப் பார்த்தால் கெட்டுத்தான் போவார்கள். இதுதான் வரலாறு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.