தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாட்டையால் அடித்துக்கொள்வேன்; காலணி அணிய மாட்டேன்: அண்ணாமலை சபதம்

2 mins read
20a19010-1cbe-421e-8cca-5775b83f9853
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். - கோப்புப் படம்: ஊடகம்

கோவை: திமுக அரசை அகற்றும் வரை காலணி அணியப் போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அவர், தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இனி வழக்கமான அரசியல் செய்யப்போவதில்லை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமராவுக்குச் செல்லும் மின்கம்பி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூற வெட்கமாக இல்லையா.

“நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கிடையாது. நான் காவல்துறையில் இருந்திருந்தால் நடவடிக்கை வேறுவிதமாக இருந்திருக்கும்.

“வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) காலையில் இருந்து 48 நாள்களுக்கு விரதம் இருந்து கடவுள் முருகனிடம் முறையிடப்போகிறேன். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு அணிய மாட்டேன். இதற்கு முடிவு தெரிந்தாக வேண்டும்.

“ஒரே இடத்தில் போராட்டம் நடத்துவதால்தான், எங்களைக் காவல்துறையினரை ஏவிவிட்டு கைது செய்கிறீர்கள். இனி ஒவ்வொரு பாஜகவினர் வீட்டிலும் போராட்டம் நடைபெறும்.

“திமுக அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காலை எனக்கு நானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன்.

“கோவையில் உள்ள எனது இல்லத்தின் அருகே காலை 10 மணிக்கு எனக்கு நானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன்.

“பாஜகவில் உள்ள எந்தவொரு தொண்டனும் இதைச் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும்,” என்றார் அண்ணாமலை.

குறிப்புச் சொற்கள்