சென்னை மாநகராட்சியின் ரூ.700 கோடி திட்ட ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து

சென்னை மாநகராட்சியின் ரூ.700 கோடி திட்ட ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து

1 mins read
dc967f6c-5c60-4880-9f70-02b715ba8c53
தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் ஒப்பந்தப்புள்ளிகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்து வருவதால், சென்னை மேயர் ஆர். பிரியா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. - படம்: மேஜிக்பிரிக்ஸ்

சென்னை: சென்னை மாநகராட்சியில் நிதி நெருக்கடியைக் குறைக்கவும் செலவினங்களை முறைப்படுத்தவும், வேளச்சேரி மேம்பாலத் திட்டம் உள்ளிட்ட ரூ.600 முதல் ரூ.700 கோடி மதிப்பிலான புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் திட்டமிடலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டது, திட்டச் செலவைச் செயற்கையாக அதிகரித்தது போன்ற முறைகேடுகள் காரணமாக, முதல்வர் ஜோசப் விஜய்யின் உத்தரவின் பேரில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது மேலும் பல திட்டங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.2,000 கோடி நிலுவைத் தொகையை முறைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதேவேளையில், வருவாயைப் பெருக்க நகரப் பகுதிகள் வாரியாகச் சொத்துவரி, தொழில்வரி வசூல் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதிக மூலதனம் தேவைப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிதி நிலைமை சீரடைந்த பிறகு, இவை மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். பொதுமக்களுக்குப் பயன்படும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் போன்ற பணிகள் எவ்வித தடையுமின்றி தொடரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்