கடலூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கூட்டணித் தலைமையை விமர்சித்துள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிக்கப்படுவதாக தவாக தலைவர் வேல்முருகன் குறைகூறியுள்ளார்.
வாக்கு கேட்கும்போது மட்டும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தேவைப்படுவதாகவும் அதன் பின்னர் அவர்கள் ஒதுக்கப்படுவதாகவும் சனிக்கிழமையன்று (டிசம்பர் 14) கடலூரில் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறினார்.
இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்றும் அவர் கோபத்துடன் குறிப்பிட்டார்.
சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தனது சட்டப்பேரவைத் தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடலூர் மாவட்டத்தில் முதல்வர் அறிவித்த ரூ.2,000 நிவாரணத் தொகை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படவில்லை என அவர் கூறினார்.
“துணை முதல்வர் உதயநிதி கடலூர் மாவட்டத்துக்கு வருகை தந்தபோது பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுமாறு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அவர் வந்து பார்வையிடவில்லை.
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கி பிச்சை போடுகின்றனர். ஆனால், மது அருந்தி உயிரிழந்தால் அரசு பத்து லட்சம் ரூபாய் வழங்குகிறது. ஆட்சி முடிந்தால் மக்களைச் சந்தித்துதான் ஆக வேண்டும்.
“அரசு நிர்வாகத்தின் திறனற்ற செயல்பாட்டால் மக்கள் பலியாகின்றனர். ஊழலுக்குத் துணை போகும் அதிகாரிகளை முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்காவிட்டால் தவாக மக்களைத் திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்,” என வேல்முருகன் மேலும் எச்சரித்துள்ளார்.