சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; 64 பேர்மீது வழக்கு

சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; 64 பேர்மீது வழக்கு

2 mins read
f5beb37c-c836-46f1-bdc9-3bfd00caed1b
பத்திரப்பதிவுக்குக் கணிசமான தொகை லஞ்சமாகப் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. - கோப்புப் படம்: ஏபிபி நியூஸ்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ​சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின்போது பல லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது; 64 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த 4ஆம் தேதி முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் வழக்கத்தைவிட சொத்துப் பதிவு, திருமணப் பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால், அந்த அலு​வல​கங்​களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், பத்திரப்பதிவுக்குக் கணிசமான தொகை லஞ்சமாகப் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், தமிழகம் முழு​வதும் உள்ள 62 முக்​கிய​மான சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் ஒரே நேரத்தில் திடீர்ச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்​கில் வராத ரூ.37.75 லட்சம் ரொக்​கமாகப் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாகவே, வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவரை 11 சார்பதிவாளர் அலு​வல​கங்​களில் பணியாற்றும் 64 பேர்மீது வழக்​குப் பதிவாகியுள்ளது.

ஐந்து சார்​ப​தி​வாளர்​கள், எட்டு உதவி​யாளர்​கள், லஞ்​சம் கொடுக்க வந்த தரகர்​கள், தனிமனிதர்​கள் எனப் பலர் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்​புத்துறை​ அதிகாரிகள் தெரிவித்தனர்.

சார்​ப​தி​வாளர்​கள் பலரும் தங்களுடைய உதவி​யாளர்​களைப் பயன்​படுத்​தியே லஞ்​சம் பெற்​ற​து தெரிய​வந்​துள்​ளது.

இதனிடையே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துச் சார்​ப​தி​வாளர் அலுவலகங்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் இதன் காரணமாக வழக்கு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காவல்துறையில் மாற்றம்

தவெக ஆட்சி அமைந்த பின்னர் காவல்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி அருண், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக மாற்றப்பட்டார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பொறுப்பேற்றுக்கொண்ட அடுத்த நாளே, முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருமீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

அரசுப்பணி பெற்றுத்தர லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார் கே.என்.நேரு.

தற்போது சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சப் பணப்பரிமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பை தமிழக அரசு திரு அருணிடம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்