பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பதிப்பக வங்கிக் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு

பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பதிப்பக வங்கிக் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு

புதிய நூல் கொள்முதல் குழு அமைப்பு, நூலக நூல் கொள்முதல் நிறுத்திவைப்பு
படம்: நியூஸ் 7

10 Nov 2026 - 7:29 pm

2 mins read

மதுரை/சென்னை: கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களில் போலி நூல்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளி யார் என்று தெரியாவிட்டாலும் லஞ்ச ஒழிப்புத்துறை உடனே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, அக்டோபர் மாதம் முதல்வர் ஜோசப் விஜய்யால் திறந்து வைக்கப்பட்ட ஏழு தளங்களைக் கொண்ட கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து திமுக, தவெக சார்பில் புகாரளிக்கப்பட்டு, பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி ஐஏஎஸ் நீக்கப்பட்டார்.

சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) நூலகத்தின் 4வது தளத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். முன்னதாக, புத்தகக் கொள்முதல் உத்தரவைச் செயல்படுத்தாதது தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது ராமசுப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரைக் கிளை, நூல்களைப் பரிந்துரைத்தவர், பதிப்பகக் கணக்கிலிருந்து பணம் பெற்றவர் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

நூல் வாங்க புதிய குழு

இதற்கிடையே, நூலகங்களுக்கு நூல்கள் வாங்கச் சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் அதில் இருப்பர் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

கோவை பெரியார் அறிவுலகத்தில் ஏறக்குறைய 3,000க்கும் மேற்பட்ட நூல்கள் போலியாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகங்களிலும் போலி நூல்கள் சிக்கியுள்ளன. கன்னிமாராவில் மட்டும் 523 போலி நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்று ஒரே முகவரியில் 20 பதிப்பகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் பல மோசடி பதிப்பகங்கள் இருக்கலாம். மோசடிப் பதிப்பகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நூலகங்களிலும் ஆய்வு செய்து போலி நூல்கள் கண்டறியப்படும். தமிழகம் முழுவதும் நூலகங்களுக்கான கொள்முதல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்