சென்னை: தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வந்த எண்ணற்ற புகார்களை அடுத்து, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த திங்கட்கிழமை 30 பத்திரப் பதிவு அலுவலகங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
அந்தச் சோதனை நடவடிக்கையில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளையும் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி
சோதனை நடத்தப்பட்ட அலுவலகங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி பத்திரப் பதிவு அலுவலகத்தில் திங்கட்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறை உதவி கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பத்திரப் பதிவு அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டு, ஊழியர்கள் யாரும் வெளியில் சென்றுவிடாமல் பார்த்துக்கொண்டனர்.
அங்கிருந்த அதிகாரிகள் உள்பட ஊழியர்கள், பத்திரப் பதிவுக்கு வந்திருந்தோர், அங்கிருந்த அனைவரிடமும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் லஞ்சஒழிப்பு, காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலைப் பூட்டிய அதிகாரிகள், பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொண்டு, ஒவ்வொருவராக வெளியே அனுப்பினர்.
இங்கு கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.64 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பலமுக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, சார் பதிவாளர் வேல்முருகன், புரோக்கர்கள், அலுவலர்கள் உட்பட 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னேரி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பத்திரப் பதிவு அலுவலகத்தில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராமசந்திரமூர்த்தி தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது திடீரென அங்குப் பணியில் இருந்த எழுத்தர் ஒருவர், தான் வைத்திருந்த பணத்தைச் சுற்றுச்சுவர் வழியாக அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வீசினார். இதனைப் பார்த்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அந்தப் பணத்தைக் கைப்பற்றி அந்த எழுத்தரிடம் தீவிர விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை இரவு 8.00 மணி வரை நீடித்தது.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல் வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம், திருப்பெரும்புதூர் உள்ளிட்ட 30 பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த விவரங்கள், சோதனைகள் முழுமையடைந்த பின்னர் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.